திருச்சி: சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு அம்மன் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவசர்பங்களாக திருமேனியில் தரிசித்து அருள் பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் சிறப்பாக நடைபெறும் விழாக்களில் பூச்சொரிதல் விழாவும் ஒன்றாகும். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நலனுக்காகவும் சமயபுரம் மாரியம்மனே பச்சை பட்டினி விரதம் இருப்பது இவ்விழாவின் சிறப்பாகும். மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம்.
மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதமான நோய்களும் தீவினைகளும் அணுகாது, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி, மாரியம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது விழாவின் தனிச்சிறப்பு ஆகும்.
சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகல தொடக்கம் காப்புக் கட்டுதல்
அதன்படி, இந்தாண்டு மார்ச் 12ஆம் தேதி நேற்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், வாஸ்து சாந்தி முடிந்து சமயபுரம் மாரியம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 13) பூச்சொரிதல் விழா கோலாகலமாக தொடங்கியது. கோயில் நிர்வாகம் சார்பில் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் யானை மீது பூக்களை கொண்டு வந்த கோயில் பணியாளர்கள் அம்மனுக்கு பூக்களை சாத்தினர். இதேபோல், பக்தர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பூக்களை கூடைகளில் வைத்து தலையில் சுமந்து வந்தும் கையில் ஏந்தி வந்தும் பக்தி பரவசத்துடன் அம்மனுக்கு சாத்தினர்.
சாமி தரிசனம்
கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்தாண்டு பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்பதால், பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவேண்டும் - பி.ஆர்.பாண்டியன்