திருச்சி நகரின் பொன் நகர் பகுதியிலுள்ள ரேஷன் கடை ஒன்றில் பிரதமர் மோடியின் படத்தை வைப்பது குறித்து அப்பகுதியில் உள்ள பாஜக மற்றும் திமுகவினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக இன்று (ஏப்.20) பாஜகவினர் மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது திமுகவினர் தாக்கியதாகக் கூறி, பாஜகவின் மண்டலத்தலைவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ரேஷன் கடையில் மோடி படம் வைக்க எதிர்ப்பு:திருச்சி கன்டோன்மென்ட் பாஜக மண்டலத் தலைவர் பரமசிவம் தலைமையிலான பாஜகவினர், பொன் நகர் பகுதியில் உள்ள அமராவதி கூட்டுறவு ரேஷன் கடையில், பிரதமர் மோடி படத்தை வைத்தனர். அப்போது ரேஷன் கடையில் நின்றிருந்த பொதுமக்கள் சிலரும், 55ஆவது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் மற்றும் திமுகவினரும் மோடி படத்தை வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், பிரதமர் மோடி படம் கீழே விழுந்து நொறுங்கியது.