திருச்சி: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் வாயில் வெள்ளைத்துணி கட்டிக்கொண்டு வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது தீர்வாகாது என பதாகைகளைப் பிடிப்போம்.. பிடிப்போம்.. என காங்கிரஸ் மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை விட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அருணாச்சல மன்றத்தில் கூடினார்கள்.
காங்கிரஸார், 10 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட போராட்டம் வழக்கம்போல தாமதமாக 10.45-க்கு தொடங்கியது. போராட்டத்தை அலுவலக வாயிலில் உட்கார்ந்து தொடங்கியவர்கள், பின்னர் சாலைக்கு வந்தனர். காவல்துறை தடுக்க முற்பட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளே உட்கார்ந்தால் யாருக்கும் தெரியாது. எனவே பத்தே நிமிடங்கள் சாலையில் நின்றுவிட்டு செல்கிறோம் எனக்கூறி சாலைக்கு வந்தனர்.
சிக்கலில் முடிந்த காங்கிரஸ் போராட்டம் 2 நிமிடங்கள் சத்தம் போடாமல் அமைதி காத்தவர்கள் திருநாவுக்கரசரை பேசச்சொல்ல, திருநாவுக்கரசர் அழகிரியின் அறிக்கையை அட்சரம் மாறாமல் ஒப்பித்துக்கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த தொண்டர் அண்ணே பறையடிச்சு உற்சாகமாக கொண்டாடுறாங்கண்ணே.. வயிறு எரியுது என சவுண்டு கொடுக்க.. திருநாவுக்கரசர் சற்று கடுப்பாகி அவரை அப்புறப்படுத்தினார்.
காங்கிரஸ்காரர்கள் அவரோட பேரு சிக்கல் சண்முகம்ங்க.. இத பெரிதாக்காதீங்க.. என வேண்டுகோள் வைத்தனர். கூட்டத்தில் இருந்தவர்கள் தலைமை கூறியபடியே கூடினார்கள், கலைந்தார்கள். இதில் திருநாவுக்கரசர், முன்னாள் மேயர் சுஜாதா, பொருளாளர்கள் ராஜா, நசீர், மலைக்கோட்டை முரளி, மாமன்ற உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க:பேரறிவாளன் விடுதலை எதிர்ப்பு: திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டம்