திருச்சி மாவட்டம், மணப்பாறை - விராலிமலை சாலையில் உள்ளது வாகைக்குளம். இப்பகுதியில் பல ஆண்டுகளாக மணப்பாறை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், இப்பகுதி சுகாதார சீர்கேட்டிற்குள்ளாகி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டிவருகின்றனர்.
இது தொடர்பாக, அப்பகுதி பொது மக்கள் நமது ஈடிவி பரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “இப்பகுதியில் பல வருடங்களாக நகராட்சி நிர்வாகத்தினர், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உணவகம் வைத்திருப்பவர்கள், கோழி கடை வைத்திருப்பவர்கள், அதன் இறைச்சிகளை முறைப்படி அப்புறப்படுத்தாமல் சாலையோரத்தில் உள்ள வாகைக்குளம் பகுதியிலேயேக் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை இரவு நேரங்களில் நகராட்சி ஊழியர்கள் தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் ஏற்படும் புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இப்பகுதியானது, மக்கள் வசிப்பதற்கு தகுதியற்றதாக மாறிவருகிறது.