சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும்போது, நிலவானது சூரியனை மறைக்கிறது. இதனால், நிலவின் நிழல் பூமியில் விழும்போது, சூரியன் மறைந்துபோகிறது. இதைத்தான் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.
இன்று காலை நெருப்பு வளைய முழு சூரிய கிரகணம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நன்றாக தெரிந்தது. பொதுமக்கள் இந்த சூரிய கிரகணத்தை பார்த்து ரசிக்க அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புடன் பார்த்து ரசிப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 10,000 சோலார் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இன்று விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் சூரிய கிரகணத்தைப் பார்த்து ரசித்தனர்.
இதேபோல, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று சூரிய கிரகணத்தை தொலைநோக்கியில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் கேரளா மாநிலத்திலிருந்து ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மாணவர்களுக்கு விளக்கிகாட்டப்பட்டன.
சூரிய கிரகண நிகழ்வு பல்வேறு மாவட்டங்களில் மக்கள் ரசித்தனர் மதுரையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சூரிய கிரகணம் பார்க்கும் நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாக 9.30 மணியளவில் சூரிய கிரகணம் 93 விழுக்காடு தெரிந்தது. ஒவ்வொரு பகுதியிலும் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி ஆர்வத்தோடு சூரிய கிரகணத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் மற்றும் அப்சர்வேட்டரி வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் கண்டு ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொடைக்கானலில் 96 விழுக்காடு தெளிவாக தெரிந்தது. இந்நிகழ்வை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப்பயணிகளும் கண்டுகளித்தனர்.
இதேபோல திருச்சி, கடலூர், வேலூர், நாகை, விழுப்புரம், பெரம்பலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் செய்யப்பட்டிருந்த சிறப்பு ஏற்பாடுகள் மூவம் பொதுமக்கள் சூரிய கிரகணத்தைக் கண்டு ரசித்தனர்.
சூரிய கிரகண நிகழ்வும் பரம்பரியமும் மக்கள் ஒரு புறம் இந்த அற்புத சூரிய கிரகணத்தைக் கண்டு ரசித்தாலும், இந்து மத நம்பிக்கைகள்படி கிரகணங்கள் ஏற்படும்போது, கோயில்களின் நடை சாத்தப்பட்டிருக்கும். எனவே கிரகணத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயங்களில் சுவாமி அம்பாளுக்கு காவிரியில், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் காவிரியின் வடகரையில் வதான்ஈஸ்வரர் ஆலயத்திலிருந்து சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் அஸ்திர தேவருக்கு புனித குடத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
கோயில்களில் சிறப்பு வழிபாடு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் இன்று மதியம் 12.30 மணிக்கு திறக்கப்பட்டு பரிகார பூஜைகளான திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, காலசாந்தி பூஜைகள் போன்றவை ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு செய்யப்பட்டன.
இதையும் படிங்க: சிறந்த நிர்வாகத்தில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு