கரோனா வைரஸ் தாக்குதல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் கடந்த ஏழாம் தேதி திறக்கப்பட்டது. முதல் நாளே 172 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்று தீர்ந்தன. இரண்டாவது நாளான நேற்று 125 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்று தீர்ந்தன. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சில மதுபானக் கடைகளில் தகுந்த இடைவெளி பின்பற்றவில்லை என்று புகார் எழுந்தது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டது. ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அறிவுரை வழங்கியது. இதையடுத்து நேற்று மாலை 5 மணியுடன் பூட்டப்பட்ட மதுபானக் கடைகள் இன்று காலை திறக்கப்படவில்லை.