தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் முதன்முறையாக திருச்சியில் 'காலை உணவு வங்கி' திட்டம்!

தமிழ்நாட்டில் முதன்முறையாக 'காலை உணவு வங்கி' திட்டம், திருச்சி அருகே தென்னூரிலுள்ள சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.

காலை உணவு வங்கி
காலை உணவு வங்கி

By

Published : Jun 23, 2022, 3:07 PM IST

திருச்சி:தென்னூர், சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் இன்று (ஜூன்23) 'காலை உணவு வங்கி' எனும் முன்னோடித் திட்டம் மாநிலத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்டது. 2007 முதல் திருச்சி மாவட்டத்தில் காலை உணவுத்திட்டம், நகராட்சி அரசு உதவி பெறும் பள்ளிகளில் மக்கள் பங்களிப்போடு நடைபெற்று வருகிறது.

2018ஆம் ஆண்டு முதல் இப்பள்ளியில் 150 மாணவர்களுக்கு தினந்தோறும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலை உணவாக இட்லி, சாம்பார், இடியாப்பம், வெண்பொங்கல், சட்னி, சர்க்கரைப் பொங்கல், உப்புமா, சப்பாத்தி, குருமா, தயிர்ச்சாதம் ஆகியவை வழங்கப்படுகின்றன. பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாகவும் மற்றும் அதற்குத்தேவையான உணவுப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக மக்கள் பங்களிப்போடு 'காலை உணவு வங்கி' (Breakfast Bank) எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் திருமண நாள், பிறந்த நாள், திருமண நிச்சயதார்த்த நாள், பெற்றோர் நினைவு நாள், பணியில் சேர்ந்த நாள், பணியில் இருந்து ஓய்வுபெற்ற நாள், புதுமனை புகு நாள், வீட்டு மனை வாங்கிய நாள், 60ஆவது பிறந்தநாள், 80ஆவது பிறந்த நாள் போன்ற முக்கிய நாள்களில் மாணவ-மாணவியருக்கு காலை உணவு தயாரிக்க வேண்டிய மளிகைப்பொருள்களான அரிசி, துவரம்பருப்பு, பாசிபருப்பு, கோதுமை ரவை, வெல்லம், கடுகு, சீரகம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை அடித்தளமிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற முதல்வர் சிவக்குமார் கூறியதாவது, 'பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்டத்திற்கு பெருமளவில் உதவி வருகிறார்கள். தங்கள் வீட்டு விஷேச நாள்களில் உணவளிக்க வேண்டும் என்ற சூழலில் ஒருவர் மட்டுமே இதற்கு முன்பு பங்கேற்க வாய்ப்பாக இருந்தது.

தற்போது பலரும் பங்குபெறும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த 'காலை உணவு வங்கி' என்ற திட்டத்தில் பொதுமக்கள் காலை உணவிற்குத் தேவையான அரிசி, பருப்பு வகைகள், ரவை, கோதுமை ரவை, சேமியா, வெல்லம், முந்திரி, திராட்சை, மிளகாய், புளி, மிளகு , நெய், எண்ணெய் மற்றும் காய்கறிகளை வழங்கிட இயலும். அவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அவை தினந்தோறும் மாணவர்கள் விரும்பும் உணவாக, பள்ளியிலேயே சமைத்து வழங்கப்படும். பள்ளியிலேயே காலை உணவுத்திட்டத்தை வலுப்படுத்த இத்திட்டம் உதவுகிறது.

காலையில் மாணவர்கள் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளில் தங்களை சோர்வில்லாமல் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ஏற்கெனவே 12.02.2020 முதல் பள்ளியில் 'அட்சயபாத்திரம்' எனும் காய்கறிகள் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள 'காலை உணவு வங்கி'-யில் பெறப்படும் மளிகைப்பொருள்கள் இத்திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தும்.

பொதுமக்கள் தாங்கள் விரும்பும் நாட்களில் மனமுவந்து பள்ளிக்குப் பொருட்களை வழங்கலாம். மேலும் தமிழ்நாடு அரசு, பள்ளிகளில் செயல்படுத்த உள்ள காலை உணவுத்திட்டத்தில் பள்ளி வாரியாகவோ, மாவட்டத்தில் ஏதேனும் ஒரு இடத்திலோ 'காலை உணவு வங்கி'-யை தொடங்கும்போது அங்கு உணவுப்பொருட்கள் சேகரிப்பட்டு, அத்திட்டம் மேலும் வலிமை பெறும்.

அரசுக்கு செலவினம் குறையவும் வாய்ப்புள்ளது. மக்கள் மற்றும் தனியார் அரசுடன் பங்கு பெறுவதற்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமையும்’ எனக் கூறினார்.
இக்காலை உணவு வங்கி திட்டம் பற்றி பெற்றோர் கூறுகையில், 'எங்கள் குழந்தைகள் பள்ளியில் வழங்கப்படும் தரமான காலை உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். குடும்பச்செலவு குறைகிறது. குறித்த நேரத்தில் பள்ளிக்குச் சென்று விடுகிறார்கள். பள்ளிக்கும் விடுமுறை எடுப்பதில்லை’ என்றனர்.

தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் 'காலை உணவு வங்கி' திட்டம்
இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அகில பாரத ஐய்யப்பா சேவா சங்கத்தின் புரவலர் என்.வி.வி. முரளி, காலை உணவு வங்கியை தொடங்கி வைத்து அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 2018ஆம் ஆண்டில் இருந்து இப்பள்ளியில் காலை உணவுத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

மேலும் மாணவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் படிக்க முடியும். இன்று தொடங்கிய இத்திட்டம், காலை உணவுத்திட்டத்தில் புதிய மைல்கல் ஆகும். பொதுமக்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் இணைந்து இத்திட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க: 'சபாஷ் காவலரே சபாஷ்...': பழுதான சாலையை சரி செய்த போக்குவரத்து காவலருக்கு மக்கள் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details