தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் - தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாள் ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாகுபடிக்காக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு பணிகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து பேசிய அவர், ’அண்ணாமலை அரசியல் செய்கிறார்; திமுக மக்களுக்கு நல்லது செய்து ஆட்சி செய்கிறது என்றும்; மாநிலம் அமைதிப் பூங்காவாக உள்ளதாலேயே பல முதலீட்டாளர்கள் இங்கு வருகின்றனர்’ என்றும் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

By

Published : May 31, 2022, 10:42 PM IST

திருச்சி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்களாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வழிப்பாதைகளின் தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக இன்று (மே 31) ஆய்வுப்பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய முதலமைச்சர், 'கடந்த இரு தினங்களாக டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் நீர் ஆதாரப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். நடந்துள்ள பணிகள் மன மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது. திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மகசூல் பெருக்கம், மகிழ்வு, விவசாயிகளின் வளர்ச்சி உள்ளிட்ட 7 உறுதி மொழிகளைக் கூறி இருந்தேன்.

13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி:அந்த உறுதிமொழிகள் ஒரு வருடத்தில் நிறைவேறும் நிலையில் உள்ளது. கடைமடை வரை தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல 68 கோடி ரூபாயில் 467 கிலோமீட்டர் தொலைவிற்கு 647 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 4.90 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று, இவ்வாண்டும் பருவ மழைக்கு முன்பே ரூ.80 கோடி ரூபாயில் 683 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

ரூ.47 கோடியில் ரசாயன உரங்கள்:கடந்த 23ஆம் தேதி பணிகள் தொடங்கப்பட்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது. குறுவையில் 2.5 லட்சம் ஏக்கரும் சம்பாவில் 13.05 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இவ்வாண்டும் விளைச்சலில் சாதனை புரிவோம். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே, கோடைப் பயிர் சாகுபடி அதிகரிக்கும். ரூ.69 கோடியில் குறுவை தொகுப்பு வழங்கப்படும்.

50% மானியத்தில் உழவுக்கருவிகள்: இதன் வாயிலாக, 3 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். ரூ.47 கோடி மதிப்பிலான யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ் உள்ளிட்ட ரசாயன உரங்கள் முழு மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும். டிராக்டர் உள்ளிட்ட உழவுக்கருவிகள் 50% மானியத்தில் வழங்கப்படும்' என்று கூறினார்.

தமிழ்நாடு அமைதி பூங்கா:மேலும், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என குறிப்பிட்டு வருவது குறித்த கேள்விக்கு சாதி, மத மோதல்கள், வன்முறைகள் இல்லாமல் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்குகிறது. ஆகவே தான், தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் அதிகம் வருகின்றனர். அதற்கு இதுவே சாட்சி' என்று விளக்கினார்.

பட்டியலின விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம்:அத்துடன் அவர், 'தோட்டக்கலை துறை மூலமாக பட்டியலின விவசாயிகளுக்கு மட்டும் ரூ.100 மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. அது அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மகசூல் பெருக்கத்தால் மகிழும் மக்கள், விவசாயிகளை காணவே இந்த மின்னல் வேக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன். இன்றைய தேதியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வு ஊதியம், பணப்பலன்கள் வயது வரம்பு குறைப்பு குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசித்து வருகிறோம். அண்ணாமலை அரசியல் செய்கிறார்; திமுக மக்களுக்கு நல்லது செய்து ஆட்சி செய்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு முதன்மைச்செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது குவியும் புகார்!

ABOUT THE AUTHOR

...view details