திருச்சி: மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் கூறியதாவது;
கறுப்பு பூஞ்சை நிலவரம்;
கறுப்பு பூஞ்சை நோயால் இதுவரை ஆயிரத்து 736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கு 45 ஆயிரம் மருந்து குப்பிகள் வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. ஆனால், ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை 11 ,796 மருந்து குப்பிகள் மட்டுமே வந்துள்ளது. நோயாளிகளுக்கு பயன்படுத்தியது போக தற்போது இருப்பில் 4,366 மருந்து குப்பிகள் மட்டுமே உள்ளன.
இந்நோய் காரணமாக 77 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி வர வர பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு கோடியே 10 லட்சம் தடுப்பூசிகள் வந்தன. இதில் ஒரு கோடியே 5 லட்சம் தடுப்பூசிகள் நேற்று (ஜூன்.14) இரவு முடிந்து விட்டன. இன்று (ஜூன்.15) காலை 6.16 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இவை பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 2.5 லட்சம் ஊசிகள் செலுத்தப்படுகின்றன. ஜூன் மாதத்திற்குள் 42 லட்சம் தடுப்பூசிகள் பிரித்துப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. வர வர செலுத்தப்படும். இனி தடுப்பூசி மத்திய அரசிடமிருந்து வருவதில் தடை இருக்காது என்று தெரிகிறது.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் கரோனா உயிரிழப்பை மறைக்க வேண்டிய அவசியமில்லை;
இறப்பு விழுக்காட்டை குறைத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே 23 மாவட்டங்களுக்கு சென்று இருக்கிறோம். தற்போது ஐந்து மாவட்டங்களுக்கு செல்லவிருக்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் ஒரு மரணத்தைக் கூட மறைக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மறைக்க முடியாது. மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் தெளிவாக இருக்கிறோம்.
மேலும், இறப்பு எண்ணிக்கையை கூறி தான் ஆகவேண்டும். இறந்த காரணம் வேண்டுமானால் மாறுபடலாம். இறந்ததை கூறியாக வேண்டும். கரோனா தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவர் 25 நாள்களில் குணமடைந்து விடுவார். அதன் பின்னர் வேறு இணை நோய் காரணமாக இறக்கிறார்கள். அதனால் இறப்புக்கு கரோனா தொற்று காரணமாக இருக்காது.
ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி, அந்த நேரத்தில் இறப்புக்கான நோய் காரணம் மட்டுமே கூறப்படும். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. கடந்த ஆட்சியிலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரோடு மருத்துவமனைக்கு செல்லும் போது பாசிடிவ். வெளியில் வரும்போது அவருக்கு நெகட்டிவ். அரசு மரியாதையுடன் தகனம் நடைபெற்றது.
அதேபோல் வசந்தகுமார் மருத்துமனைக்குள் செல்லும்போது கரோனா பாசிட்டிவ். இறந்து வெளியே வரும்போது நெகட்டிவ். அதனால் நெகட்டிவ் சான்றிதழ் தான் கொடுக்கப்பட்டது. சான்றிதழ் மாற்றிக் கொடுப்பதால் எந்தவிதமான லாபமும் கிடையாது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் இறப்புச் சான்றிதழ்;
இந்தச் சான்றிதழ்கள், பெற்றோரை இழக்கும் குழந்தைகள் உதவித் தொகை பெற மட்டுமே பயன்படும். பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவித்தொகை 18 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய இந்திய மருத்துவ முறை சிகிச்சைக்காக 69 இடங்களில் மருத்துவமனை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெளியில் செல்லும்போது பாதுகாப்பு பெட்டகம் கொடுத்து அனுப்பப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மட்டுமே நிவாரணம்’