திருச்சி மாநகராட்சி கே.அபிஷேகபுரத்திற்குட்பட்ட நியூ பாத்திமா நகரில், நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டத்தின்கீழ் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மார்ச் 8ஆம் தேதியான இன்று தொடக்கி வைத்து திட்டத்தில் பணியாற்ற உள்ளவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
நகர்ப்புறங்களுக்கும் வாய்ப்பு
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், 'மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் தான் பயன்பெற்று வருகின்றனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் குறிப்பாக வடமாநிலங்களில் 36 % தான் நகர்ப்புறத்தில் மக்கள் வசிக்கிறார்கள்.
பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வசிப்பதால் பல திட்டங்களை மத்திய அரசு கிராமப்புறத்தை மையமாக வைத்தே செயல்படுத்துகிறது. ஆனால், தமிழ்நாட்டில் 63% மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள்.
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் பயன்பெற முடியவில்லை. எனவே தான், தமிழ்நாடு அரசு சார்பில் 'நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம்' தொடங்கப்பட்டது.
ரூ.100 கோடி ஒதுக்கீடு
இந்த திட்டத்திற்கு தற்போது ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மாநகராட்சியில் உள்ள ஒரு மண்டலம், 27 பேரூராட்சிகள், 5 நகராட்சிகளில் மட்டும் இது செயல்படுத்தப்பட உள்ளது. நிதி நிலைமைக்கு ஏற்ப இது விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள சாலை தூய்மைப்படுத்துதல், மரம் நடுதல், பூங்கா பராமரிப்பு உள்ளிட்டப் பணிகளை மக்கள் மேற்கொள்ள முடியும்’ என்றார்.