திருச்சி: வயலூர் சாலையில் உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகே நீர்வளத்துறையின் சார்பில் ஆற்று பாதுகாப்புக் கோட்டம் மற்றும் அரியாறு வடிநிலக் கோட்டங்களுக்குட்பட்ட ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வாயை தூர்வாருதல் ஆகிய பணிகளுக்காக ரூ.18.75 கோடி மதிப்பிலான 90 பணிகளை நேற்று (ஏப்.23) நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
ரூ.80 கோடி செலவில் தூர்வாரும் பணி:இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் 4,964 கிலோ மீட்டரில் தூர்வாருதல் உள்ளிட்ட 683 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிற ஜூன் 10ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதன் வாயிலாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாக இருக்கும். கடைமடை வரை தண்ணீர் செல்வது உறுதி செய்யப்படும்" என்றார்.
காவிரியில் கழிவுநீர் கால்வாயில் கலக்காமல் தடுக்கும் பணி:இதற்கிடையே திருச்சி உய்யகொண்டான் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவது தொடர்பாக ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி கேள்வி தொடர்பாக பதிலளித்த அவர், "நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்கள் திருச்சிக்கு நேரில் வந்து 12 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ள அரிஸ்டோ மேம்பாலம் பணி உட்பட சாலை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளைத் தொடங்க வழிவகை செய்யப்படும். காவிரி பாலத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே, உள்ள பழைய பாலத்தை புனரமைத்து வலுப்படுத்தப்படும். மேலும், புதிய பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கழிவுநீர் மறுசுழற்சி திட்டத்தின் மூலம் காவிரி ஆற்றில் கலக்கும் சாக்கடையை நிரந்தரமாக கலக்காமல் இருப்பதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
அமைச்சர் கே.என்.நேரு பேட்டி விருட்டென கிளம்பிய அமைச்சர்:எப்போதும் சளைக்காமல் கேள்விக்கணைகளை எதிர்கொள்ளும் அமைச்சர் கே.என்.நேரு, மற்ற கேள்விகளுக்கு (தூர்வாருதல் குறித்த அல்லாத கேள்விகள்) பதில் அளிக்காமல் விருட்டென சென்றுவிட்டார். இதுகுறித்து கட்சி வட்டாரத்தில் விசாரித்துபோது, உட்கட்சித் தேர்தல் பிரஷர், ராமஜெயம் கொலை வழக்கு குறித்த சி.ஐ.டி விசாரணை அழுத்தம் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்கின்றனர். எது எப்படியோ... உங்க கன்னித் தமிழைக் கேட்காமல் இருக்க முடியாது. மலைக்கோட்டை மன்னரே என கலகலப்பாக கலைந்தனர் நிருபர்கள்.
இதையும் படிங்க:அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் நினைவு தினம்: 2012ம் ஆண்டு நடந்தது என்ன?