திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முகந்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபி அசோக். இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் மீது கொண்ட பற்றினால் இவர் தனது 20 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுவரும் இவர், தன்னுடைய நிலத்தில், மா, கொய்யா, நெல்லி, வாழை, தென்னை போன்ற பலவகை மரங்களையும் அகத்திக்கீரை, ஓமவள்ளி, கற்றாழை, பெரியாநங்கை, சிறியாநங்கை, திருநீற்று பச்சிலை, தூதுவளை, துளசி போன்ற மூலிகைகளையும் சாகுபடி செய்துவருகிறார்.
இதுமட்டுமல்லாமல் வீட்டுத் தோட்டத்தில் மாட்டுச் சாணம், வேப்பங்கொட்டை உரம், மண்புழு உரம், போன்றவற்றை இட்டு கத்தரி, வெண்டை, அவரை, கொத்தவரை போன்ற காய்களையும் இயற்கை முறையிலேயே வளர்த்துவருகிறார் வெளிநாட்டில் 10 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு இயற்கைக்கு திரும்பிய இந்த மென்பொறியாளர் விவசாயி.
பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த மறைந்த நெல் ஜெயராமனின் அறிவுரையின்படி கிச்சளி சம்பா, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கருப்பு கவுணி, பொன்னி போன்ற பாரம்பரிய நெல் வகைகளையும் சபி அசோக் பயிரிட்டு அறுவடை செய்துவருகிறார்.