காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா மற்றும் காவிரி மேலாண்மை வாரியத் தலைவரை கண்டித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, "கர்நாடகம் சட்டவிரோதமாக மேகதாது அணை கட்ட முயற்சி எடுக்கிறது. மறைமுகமாக மத்திய அரசும், பிரதமரும் துணை போகிறார்கள். மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆணையத் தலைவர் அடிபணியக்கூடாது.
ஓராண்டு காலமாக ஆணையம் முடங்கி இருக்கிறது.குறிப்பாக கர்நாடகமும் மத்திய அரசும் கூட்டு சேர்ந்து ஆணையத்தின் செயல்பாடுகளை அதிகாரத்தை பறிக்க மறைமுக முயற்சியில் ஈடுபடுகிறது. இதற்கு ஆணையத் தலைவர் இடமளிக்கக்கூடாது.
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையம் முழு செயல்பாட்டுக்கு வரவேண்டும்.
தற்போது தமிழகத்தில் கருகும் பயிரை காப்பாற்ற மாதாந்திர அடிப்படையில் வர வேண்டிய தண்ணீரையும், ஜூன் மாதத்திற்கான ஒதுக்கீட்டையும் உடனடியாக பெற்றுத் தர ஆணையம் முன்வர வேண்டும்.