திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் சுவரைத் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்ட அடையாளம் தெரியாத நபர்களைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இது தவிரத் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவாரூரில் காவல் துறையினர் வாகன சோதனைக்காக ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது. அதில் வந்த இரண்டு நபர்கள் தப்பியோடினர். இதைத் தொடர்ந்து அவர்களை விரட்டிச் சென்ற காவல் துறையினர் இருவரில் ஒருவரைப் பிடித்தனர்.
பிடிபட்ட அந்த நபர் திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகையைப் பையில் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 4.5 கிலோ எடையுள்ள தங்க நகைகளைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு குற்றவாளியான சுரேஷ் என்பவரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். சுரேஷுக்கு அவரது தாயார் கமலவல்லி உடந்தையாக இருந்தது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.