நாகை மாவட்டம் சீர்காழி ஈசானி தெரு பகுதியைச் சேர்ந்த சமீரா பானு. அவரது பாட்டி கதிஜா பேகம். இவர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சமிரா பானுவின் தந்தை முகமது யூசப் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இவ்வழக்கை சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. சிபிசிஐடி காவலர்களுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்ட நிலையில், கடலூர் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரை 9 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவருடன் கொலை செய்த தினேஷ் சுரேஷ் ஆனந்த் உள்ளிட்ட 3 பேரையும் சிபிசிஐடி காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.