திருச்சி: கரூர் மாவட்ட தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு மாணவி நவம்பர் 19ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில் அந்தப் பள்ளியில் பணியாற்றிய கணித ஆசிரியர் ஒருவர், திருச்சியில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது டைரியில் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதி வைத்துள்ளார். அதில், மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தன்னை தொடர்புப்படுத்தி பள்ளியில் சக ஆசிரியர்களும், மாணவர்களும் கிண்டல் செய்தனர்.
மன உளைச்சலில் தற்கொலை
எனக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இதனால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்து கொள்கிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர், மனைவி, மகன்கள் ஆகியோருடன் கரூரில் வசித்து வந்தார். இவரது மாமனார் வீடு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே டாப் செங்காட்டுப்பட்டியில் உள்ளது.
கரூர் - திருச்சி
மாமியார் இறந்துவிட்டதால் மாமனாரும் கரூரில் இவர்களோடு குடியேறிவிட்டார். இந்நிலையில், டாப் செங்காட்டுப்பட்டியிலுள்ள வீட்டின்கீழ் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளனர். மேற்தளத்தைப் பூட்டி வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (நவ. 24) மதியம் பள்ளியில் ஒரு மணிநேரம் அனுமதிகேட்டு விட்டு கணித ஆசிரியர் டாப் செங்காட்டுப்பட்டி வந்துள்ளார். அவர் பூட்டியிருந்த வீட்டின் மேற்தளத்தைத் திறந்து கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஒரு மணிநேரத்தில் பள்ளிக்கு மீண்டும் வருவதாகக் கூறிவிட்டு வந்த ஆசிரியர் வராததால், பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியரின் மனைவியைத் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர்.
பள்ளிக்கு வராததால் சந்தேகம்
மாமனாருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி பள்ளியில் அனுமதி கேட்டு வந்துள்ளார். ஆனால், அப்படி எதுவும் இல்லாததால் சந்தேகமடைந்த ஆசிரியரின் மனைவி அக்கம்பக்கத்தில் விசாரிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து டாப் செங்காட்டுப்பட்டியில் உள்ள உறவினர் ஒருவரைத் தொடர்பு கொண்டு தனது கணவர் அங்கு வந்துள்ளாரா என்று கேட்டுள்ளார். அப்போது அவர் வந்தது உறுதி செய்யப்பட்டதால், வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதை தொடர்ந்து ஆசிரியரின் மனைவியும் குடும்பத்தினரும் டாப் செங்காட்டுப்பட்டிக்கு விரைந்து வந்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து ஆசிரியரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.