தமிழ்நாடு

tamil nadu

குறுவை சாகுபடிக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு

By

Published : Jun 16, 2020, 4:38 PM IST

Updated : Jun 16, 2020, 6:09 PM IST

திருச்சி: கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை அமைச்சர்கள் திறந்து விட்டனர்.

குறுவை சாகுபடிக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு
குறுவை சாகுபடிக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக இயற்கை பொய்த்து போனதாலும் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்காததால் குறித்த காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி முற்றிலும் தடைப்பட்டு போனது.

இந்தநிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருந்ததால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விட்டார்.

இந்த நீர் நேற்று மதியம் 2 மணிக்கு திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்து. அங்கிருந்து பொதுப்பணித்துறை அலுவலர்களால் திறக்கப்பட்ட நீர் இன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணையை வந்தடைந்தது.

அங்கு அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு, ஓ எஸ் மணியன், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கல்லணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகள், பொதுமக்கள், மலர் தூவி வரவேற்றனர்.

காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் ஆகிய நான்கு ஆறுகளில் நீர் திறக்கப்பட்டது. தற்போது அனைத்து ஆறுகளிலும் சுமார் 500 கனஅடி வரை நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன்பின் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் காமராஜ் கூறுகையில், "தமிழ்நாட்டில் விவசாயிகளை பாதுகாக்க கூடிய ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதன் காரணமாக குறுவை சாகுபடிக்கு குறிப்பிட்ட நேரத்தில் கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு பின்பு குறிப்பிட்ட தேதியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய சாதனையாகும். இந்த ஆண்டு அதை விடக் கூடுதல் விளைச்சல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் 90 சதவீத நீர் நிலைகளை தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 312 குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. குடிமராமத்து பணியால் நீர் பஞ்சம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

தற்போது நாற்று நடுவதற்கு ஏற்ற அளவிலான நீர் திறக்கப்பட்டுள்ளது. பின்னர் உழவு உள்ளிட்ட பணிகளுக்கு ஏற்ப கூடுதலாக வழங்கப்படும். இந்தாண்டு கடைமடை வரை கட்டாயம் நீர் விநியோகம் நடைபெறும். இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதனால் அனைவருக்கும் தங்குதடையின்றி பயிர்க்கடன் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Last Updated : Jun 16, 2020, 6:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details