திருச்சிராப்பள்ளி:இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட பொதுகுழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாச ஹாலில் நடந்தது.
இதில் மாவட்ட தலைவர்கள் நிஜாம், (தெற்கு ) அப்துல் வகாப் (வடக்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். தேசிய கவுன்சில் உறுப்பினர் மன்னான், வடக்கு மாவட்ட பொருளாளர் வியாகத் அலி, ஓய்வுபெற்ற உதவி ஆட்சியர் சாகுல் அமித், ஒய்வுபெற்ற காவல் உதவி - ஆணையர் அப்துல் அஜிஸ் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கீழே காணலாம்:
- 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திருச்சி கிழக்கு தொகுதியை கேட்டுப்பெற வேண்டும்.
- திருச்சி காந்தி சந்தையை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக மீண்டும் திறக்க வேண்டும்.
- தேசிய குடியுரிமை திருத்த மசோதா சட்டத்தை திரும்பப் பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
- திருச்சி சந்திப்பு மேம்பாலப் பணியைத் துரிதப்படுத்த மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கரோனா காலத்தின்போது வாகன ஓட்டிகள், மத வழிபாடு செய்தவர்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியவர் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.