இஸ்லாமிய பெண்களின் கல்வியை மனதில் வைத்து பிரிட்டிஷ் அரசால் 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, திருச்சி கீழப்புலிவார்டு சாலையில் உள்ள வைகவுண்டஸ் கோஷன் முஸ்லிம் மகளிர் மேல்நிலைப்பள்ளி. மிகவும் பழமை வாய்ந்த இப்பள்ளி, பந்தேகானா என்றும் கோஷா பள்ளிக்கூடம் என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உருதுபாடம் கட்டாயமாகவும், ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மும்மொழி கல்வியும் கற்பிக்கப்படுகிறது.
சிறப்பாக கல்விப்பணியாற்றி வந்த கோஷன் பள்ளி, ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் பெருகியதாலும், ஆங்கிலம் பயின்றால்தான் எதிர்காலம் என்ற நம்பிக்கையில் உருது மொழிவழிக்கல்வி பயில ஆர்வம் குறைந்ததாலும் நாளடைவில் நலிவடைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் பள்ளிக்கூடத்தையே மூட அரசு நினைத்தது. ஆனால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரின் பெருமுயற்சியால், இன்றும் இப்பள்ளி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தங்கள் பெண் பிள்ளைகளை இங்கு படிக்கவைப்பதை பெற்றோரும் பெருமையாக கருதுகின்றனர்.