திருச்சி மாவட்டம் மணப்பாறை என்றாலே நினைவுக்கு வருவது அங்கு தயாரிக்கப்படும் முறுக்குதான். இந்த முறுக்கிற்கு இந்திய புவிசார் குறியீடு அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மணப்பாறை ரயில் நிலையத்தில் கிருஷ்ண ஐயர் என்பவர் முறுக்கு தயாரித்து விற்பனைசெய்தார்.
அப்போது சரமாகக் கோத்து ரயிலில் மட்டும் நடைபெற்றுவந்த இந்த முறுக்கு விற்பனையை, இன்று மணப்பாறை நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைத் தொழிலாக செய்துவருகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும்கூட மணப்பாறை முறுக்குக்கு ஓர் தனிச்சிறப்பு உண்டு. இந்தத் தனிச்சிறப்புக்குக் காரணம் இங்கு தனித்தன்மையாடு தயாரிக்கப்படுவதே என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
மணப்பாறை முறுக்குத் தொழில் - சிறப்பு காணொலி முறுக்கு தயாரிப்பாளர் பஞ்சவர்ணம் கூறுகையில், "முறுக்கை இயந்திரப் பயன்பாடு இல்லாமல் கையிலேயே பிசைந்து தயாரிக்கிறோம். மணப்பாறை தண்ணீரும் கைப்பக்குவமும் முறுக்கின் சுவைக்கு முக்கியக் காரணம். மேலும் முறுக்கிற்குத் தேவையான பொருள்களையும் வீட்டு முறைப்படியே தயார் செய்துவருகிறோம். பண்டிகைகளுக்கும் இல்ல வைபங்களுக்கும் முக்கியப் பலகாரமாக முறுக்கு இருப்பாதல் அவ்வப்போது ஆர்டர்கள் நிறையவருகின்றன" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆண்டைவிட இந்தாண்டு முறுக்குத் தயாரிக்கத் தேவையான அரிசிமாவு, எண்ணெய் போன்ற மூலப்பொருள்களின் சரக்கு மற்றும் சேவை வரி உயர்ந்துள்ளது. மூலப்பொருள்களின் விலை உயர்வால் குறைந்த லாபமே எங்களுக்கு கிடைக்கிறது. முறுக்குத் தொழிலையும் அதனை நம்பியுள்ள குடும்பங்களையும் காப்பாற்ற மானிய விலையில் மூலப்பொருள்கள் கிடைக்கவும், மூலப்பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பைக் குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கைவிடுத்தார்.
இதையும் படிங்க; நோய் தாக்கிய மரவள்ளிக்கிழங்கு - வேதனையில் விவசாயிகள்...