திருச்சிராப்பள்ளி: அரசு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, உடல் உறுப்பு மாற்றம் மற்றும் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளை பார்வையிட்டனர்.
பின்னர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய கொடையாளரின் குடும்பத்திற்கு நினைவுக் கேடயம், காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள் குழுவை கௌரவித்தார். அமைச்சர் கே.என்.நேரு ரூ.14 லட்சம் மதிப்புள்ள் ஐசிஐசிஐ அறக்கட்டளை மூலம் வந்த ஆர்டிபிசிஆர் கருவியை மருத்துவமனை முதல்வரிடம் வழங்கினார்.
திருச்சி பிளைவுட் மட்டும் ஹார்டுவேர்ஸ் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள ஆழ்துளை குழாய் கிணறு
அமைத்துக் கொடுத்த நபர்களை கௌரவித்தார். பின்னர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ரூ.3 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை திருச்சி மாவட்ட கரோனா தடுப்பு பொறுப்பாளர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சமூகப் பொறுப்புகளுடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்களிக்கும் 2 ஆயிரம் நபர்களுக்கான தடுப்பூசி போடும் நிகழ்வினை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.