தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தங்கம் விலை உயர்வால் திருட்டு அதிகரிப்பு! - திருச்சி ஆட்சியர் சிவராசு கண்டுபிடிப்பு - தங்கம் விலை உயர்வால் திருட்டு அதிகரிப்பு சொல்கிறார் மாவட்ட ஆட்சியர்

திருச்சி: தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதால் நாட்டில் திருட்டும் அதிகரித்து வருகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police Meeting in Tirchy

By

Published : Oct 18, 2019, 10:40 PM IST

நகைக்கடை, நகை அடகுக் கடைகள், வங்கிகள் பாதுகாப்பு குறித்த விளக்கக் கூட்டம் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இன்று திருச்சியில் நடந்தது. தனியார் உணவக விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன் சிந்திக்காமல் நடந்த பின்னர் அது குறித்து சிந்திப்பதுதான் இந்தியர்களின் நடைமுறையாக உள்ளது. இதே பாணியில்தான் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவம் நடந்த பிறகு தற்போது பாதுகாப்பு குறித்து பேச வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஐந்தாயிரத்து 300 சதுரஅடி அளவில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்களுக்கும் 100 பேர் பணியாற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கும் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்ற விதி உள்ளது.

இதை கண்டிப்பாக அனைவரும் செயல்படுத்த வேண்டும். இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பெயரளவுக்கு இல்லாமல், வர்த்தக நிறுவனங்களை முழுமையாக பாதுகாக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். அதேபோல் வர்த்தக நிறுவனங்கள் கட்டாயம் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு செய்ய வேண்டும். தங்கத்தின் விலை அதிக அளவில் உயர்ந்து இருப்பதால் திருட்டு அதிகரித்துள்ளது.

இதன் விலை உயர்வுதான் குற்றம் செய்யத் தூண்டுகிறது. மாணவர்கள் கூட நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரியில் கொள்ளை: வடமாநில இளைஞர்கள் 5 பேரிடம் விசாரணை

மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் பேசுகையில், ”காவல் துறையினர் இருப்பதால் குற்றங்கள் நடக்காது என்று எண்ணிவிடக் கூடாது. ஒரு நிறுவனத்திற்கு சிசிடிவி கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்த சுமார் 30 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும். குற்றங்களைத் தடுப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் உதவுகின்றன.

பல நகைக்கடைகளில் லாக்கர் வசதி இல்லாத நிலை காணப்படுகிறது. ஒரு சில நகைக்கடைகளில் இரவு நேரத்தில் ஷோகேஸில் உள்ள நகைகளை லாக்கரில் வைக்கும் நடைமுறை உள்ளது. அனைத்து நகைக் கடைகளும் இதை பின்பற்ற வேண்டும். தற்போது நவீன லாக்கர்கள் வந்துள்ளன.

அவற்றை வாங்கி நகைக் கடைகள், வங்கிகள், நகை அடகுக் கடைகளில் பொருத்த வேண்டும். வர்த்தக நிறுவனங்களை காப்பீடு செய்வது என்பதை முதலீடாகக் கருத வேண்டும். அதை செலவீனமாகக் கருதக் கூடாது. மேலும் நகைத் திருடர்களைப் பிடித்தாலும் அவர்களிடம் 100 விழுக்காடு திருடுபோன பொருள்களை பறிமுதல் செய்ய முடியாது.

நகைகளை அவர்கள் உருக்கி விற்றுவிடுகிறார்கள். அதனால் திருடுபோகாமல் இருப்பதற்கான வழிகளை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் மயில்வாகனன், நிஷா உள்ளிட்டோர் பேசினர்.

திருச்சி மாநகர காவல்துறை விளக்கக் கூட்டம்

இந்த நிகழ்ச்சியில் நகைக்கடை உரிமையாளர்கள், நகை அடகுக் கடை உரிமையாளர்கள், வங்கிகளின் நிர்வாகிகள், காவல் துறை உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிசிடிவி கேமரா, லாக்கர்கள், அலாரம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்ச விற்பனை நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதையும் படிக்கலாம்: லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு: மூன்றாவது நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details