திருச்சி:சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தி ஜி.கே. மூப்பனார் நகர் நல சங்கம் சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தலைவர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம், 64ஆவது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் பகுதியில் பட்டியலின மக்களுக்காக சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாய கூடம் கட்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதை உடனடியாக திறக்க வேண்டும். மாநகராட்சி அலுவலர்கள் இந்த சமுதாய கூடத்தை பூட்டி வைத்துள்ளனர். அதனால் இதை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சமுதாயக் கூடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி 1,200 இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதில் 38 தொலைக்காட்சிகள் மட்டும் திருவெறும்பூர் வருவாய் அலுவலரால் எடுக்கப்பட்டது.
இதன் பின்னர் இந்த சமுதாயக்கூடம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. அதோடு உள்ளே இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் மக்களுக்கு விநியோகம் செய்யப்படவில்லை. அதனால் சமுதாய கூடத்தை திறக்கவும், தொலைக்காட்சிப் பெட்டிகளை விநியோகம் செய்யவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பின்னர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சிவராசு இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பினர். இந்த போராட்டத்தில் சங்கத் துணைத் தலைவர் கற்பகம், செயலாளர் விசித்ரா, துணைச் செயலாளர் ராஜேஸ்வரி, பொருளாளர் சரளாதேவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமுதாய கூடத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: விவசாய நிலத்தை கையகப்படுத்தும் அரசு - விவசாய தம்பதி தற்கொலை முயற்சி!