திருச்சி: சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று (ஏப். 5) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு மீது பழிபோடும் திமுக: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "மத்திய அரசே சொத்துவரியை உயர்த்த சொல்லியதாக திமுக கூறிவருகிறது. அப்படி எங்கும் மத்திய அரசு குறிப்பிடவில்லை. வீண் பழியை போட்டு திமுக மக்கள் ஏமாற்ற பார்க்கிறது.
இந்தியாவிலேயே தேர்தல் அறிக்கையை புத்தகம் போட்டு வெளியிட்ட கட்சி திமுகதான். அந்த புத்தகத்தின் 487ஆவது அறிவிப்பில் சொத்துவரி உயர்த்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று கூறிவிட்டு, தற்போது சொத்துவரியை உயர்த்துவிட்டனர்.
தாலிக்கு தங்கம் என்கிற அற்புதமான திட்டம் மூலம் பல லட்சம் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பலன் அடைந்தார்கள். அதேபோலதான் திருமண உதவி திட்டமும். இந்த திட்டங்களை நிறுத்தி விட்டார்கள். ஊர் ஊராக சென்று திண்ணையில் துண்டை போட்டு பெட்டியில் குறைகளை போடுங்கள் என்றார் ஸ்டாலின். அத்துடன் கோரிக்கை நிறைவேவில்லை என்றால் நேரில் வந்து பாருங்கள் என்றும் சொன்னார். இப்போது எவ்வளவு பேரை அவர் சந்தித்துள்ளார்.
அரசு அதிகாரிகளுக்கு கட்சி பணம் எதுக்கு:திமுக செலவில்தான் முதலமைச்சர் துபாய் சென்றதாக கூறுகிறார்கள். திமுக பணத்தில், அரசு அதிகாரிகள் ஏன் துபாய் செல்ல வேண்டும்?. துபாய் சர்வதேச கண்காட்சி கடந்தாண்டு 10ஆவது மாதமே தொடங்கிவிட்டது. அது முடிய 6 நாள்களே இருக்கும் வேளையில் ஸ்டாலின் அவசரமாக சென்றுள்ளார்.
இதற்கு காரணமம் 10 மாதமாக கொள்ளை அடித்த பணத்தை துபாயில் முதலீடு செய்ய தான். இந்த விடியா அரசு 150 விழுக்காடு சொத்து வரியை உயர்த்திவிட்டது. இது கண்டனத்துக்கு உரியது. ஸ்டாலினுக்கு பொதுமக்களை பற்றிய கவலை இல்லை. அவரது வீட்டு மக்களை பற்றிய கவலையே உள்ளது.
இந்தியாவிலேயே அதிகமாக உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் உள்ள மாநிலம் என்ற நல்ல பெயரை தமிழ்நாட்டுக்கு, அதிமுக ஆட்சியில் பெற்று தந்தோம். அதனாலேயே 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினோம். ஏழை மாணவர்களுக்கு பலன் அளிக்கும் இத்திட்டத்தையும் திமுக ரத்து செய்ய முயற்சித்துவருகிறது.