திருச்சி:துறையூரில் இயங்கிவரும் சௌடாம்பிகா கல்வி குழுமத்தில் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவினை கல்வி குழுமங்களின் தலைவர் ராமமூர்த்தி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சௌடாம்பிகா கல்வி குழுமத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களின் பாதங்களை பன்னீரால் கழுவி பொட்டு வைத்து, அவர்களுக்கு மாலை அணிவித்து தீபாராதனை காட்டி காலில் விழுந்து வணங்கி வழிபட்டனர்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பாசமுடன் தங்களுக்கு பாதபூஜை செய்ததை கண்டு கண் கலங்கினர். அப்போது ஒலித்த பின்னணி குரல் மற்றும் இசையால் மாணவ, மாணவிகளும் கண் கலங்கினர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டியணைத்து உச்சி முகர்ந்து வாழ்த்தினர். பல்வேறு இடங்களில் சில மாணவ, மாணவிகள் ஒழுக்க நெறிமுறைகளை தவறி நடக்கும் வேளையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வழிபாடு நடத்திய நிகழ்வு காண்போர் நெஞ்சை நெகிழச் செய்வதாக இருந்தது.