திருச்சிராப்பள்ளி: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் ஓலையூர் கிராமத்தில் மழையின் காரணமாக விளைந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதுவரை அலுவலர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. இதனைக் கண்டித்து ஓலையூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஓலையூர், திருமலைசமுத்திரம் கிராமத்திலுள்ள வயல்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் வீணாகியுள்ளது. இதனை அரசு அலுவலர்கள் யாரும் பார்வையிடவில்லை.
இதனால் போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினர், “உடனடியாக அலுவலர்கள் கணக்கீடு செய்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வேண்டும். ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர்.