திருச்சி: மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நான்கு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டன.
அதில் மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட பிராம்பட்டியில் சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விவசாயிகளுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது. இதனால் விவசாயிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், 'இந்தப் பகுதி விவசாயிகள் விளைவிக்கக்கூடிய நெல்லை திருச்சி கொண்டு செல்வதற்கு நேரம் ஆகக் கூடிய சூழலில்,இங்கேயே இடைத்தரகர்கள் மூலம் நெல்லை நஷ்டத்திற்கு விற்கக் கூடிய சூழ்நிலையைத் தவிர்த்து அரசின் நேரடிக் கொள்முதல் நிலையத்தை உருவாக்க முயற்சித்தோம்.
விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நம்முடைய மணப்பாறைத் தொகுதியில் நான்கு இடங்களில் இன்றைக்கு நெல், கோதுமை கொள்முதல் நிலையங்களை உருவாக்கி இருக்கிறோம். இது மட்டுமல்ல, தொடர்ந்து இந்தப் பகுதி வளர்ச்சியடையும் பகுதி என்பதை முதலமைச்சரிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
எப்படி குடிப்பதற்காக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்து தாகம் தீர்த்தார், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாவில் விவசாயிகள் புறக்கணிப்பு அதே போல் விவசாயத்திற்கு காவிரி உபரி நீரைக் கொண்டு வந்து விவசாயம் செய்யக்கூடிய ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும்,உங்களுக்காகப் பாடுவதற்கு சட்டப்பேரவை உறுப்பினராக நானும்,அமைச்சர்களும் விவசாய மேம்பாட்டுக்காக எந்த நிலையிலும் உங்களுக்கு துணை நிற்கும் இருக்கும்' என்றும் தெரிவித்தார்.
இறுதியாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் நியாயவிலைக் கடையில் தரமான அரிசி வழங்கிட வேண்டும் என விடுத்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
இதையடுத்து இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பழனிச்சாமி நமது ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், 'இன்றைய தினம் நமது சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது, நெல்கொள்முதல் நிலையங்களைத் திறந்துவைத்தார்.
இந்த நெல் கொள்முதல் நிலையம் உருவாக கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இந்தப் பகுதி விவசாயிகள் போராடி வந்தனர். ஆனால், நடக்கின்ற விவசாய நிகழ்ச்சிகள் அனைத்திலும் விவசாயிகளை அரசாங்கம் ஆதரிப்பதில்லை.
இது வருந்தக்கூடிய விஷயம். இனிவரும், காலங்களில் நடைபெறுகின்ற விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகள் விவசாயிகளையும்,விவசாயக் குழுக்களில் உள்ளவர்களையும் முன்னிலைப்படுத்தி நடந்தால் சிறப்பாக இருக்கும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளிக் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்க மு.க. ஸ்டாலின் ஆணை