திருச்சி: மணப்பாறை தொகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் நிலையத்தினை, சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பிராம்பட்டி, தெற்கு சேர்ப்பட்டியில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ப.அப்துல் சமது கடந்த 20ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்து வைத்திருந்த நெல்லை அந்த கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். நெல் கொள்முதல் நிலையம் திறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் இணைய சேவை பாதிப்பு எனக்கூறி கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் அந்த வளாகத்திலேயே நெல்லை கொட்டி குவித்து வைத்துள்ளனர்.
பின்னர் இந்த நெல் கொள்முதல் நிலையத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நெல் கொள்முதல் நிலையம் திறந்து ஒரு வார காலமாகியும் இணைய சேவை பாதிப்பால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை விற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.