திருச்சிராப்பள்ளி : ’விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ நிகழ்ச்சிக்காக மணப்பாறைக்குச் சென்ற திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.
இதனையடுத்து பொதுமக்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “உங்களுடைய தாத்தா முதலமைச்சராக இருக்கும்போது எங்களுடைய மாவட்டத்திற்கு செய்து கொடுத்த நலத்திட்டங்களுக்குப் பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில் ஊழலைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை எனப் பொதுமக்களும் தாய்மார்களும் என்னிடம் உரிமையாகக் கூறுகிறார்கள்.
திமுக தலைவர், ஆளும் கட்சி அமைச்சர்கள் மீதுள்ள ஊழல்கள் குறித்தப் பட்டியலை தயார் செய்து ஆளுநரிடம் ஆதாரத்தோடு கொடுத்திருக்கிறார். முக்கியமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாலை மேம்பாட்டுக்கான ஒப்பந்தப்புள்ளியை தனது உறவினருக்குக் கொடுத்து ஆறாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து வைத்திருக்கிறார்.
தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்.இ.டி விளக்கு ஒப்பந்தப்புள்ளியில் 700 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். இறந்துபோன வேளாண் துறை அமைச்சரின் உடலை மூன்று நாள்களாகக் கொடுக்காமல் 800 கோடி ரூபாயை வைத்து விட்டு உடலை எடுத்துச் செல்லுங்கள் என பேரம் பேசினார்கள். அமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், மக்களாகிய உங்களுக்கு என்ன நிலைமை என யோசித்துப் பாருங்கள்.
திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் எப்படி இறந்தார் என மக்களுக்குக் கூற வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எடப்பாடி பழனிச்சாமி இங்கு வந்தால் அவரிடம் அம்மா எவ்வாறு இறந்தார் எனக் கேளுங்கள்... அவர் அப்படியே சிரித்துக்கொண்டே சென்று விடுவார்.
எனவே நல்லாட்சி மலர மணப்பாறையில் இருந்து திமுக சார்பாக ஒரு சட்டப்பேரவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினால், தொகுதி மக்களின் கோரிக்கைகள் அவசியம் நிறைவேற்றப்படும்” எனக் கூறி விடைபெற்றுச் சென்றார்.