கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளை இன்று முதல் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதைக் கண்டிக்கும் வகையில், திமுக சார்பில் இன்று கறுப்புச் சின்னம் அணிந்து அறப்போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் திருச்சி - தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் கட்சியினர் 5 பேர் கலந்து கொண்டனர். கறுப்புச் சின்னம் அணிந்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கே.என். நேரு செய்தியாளரிடம் கூறுகையில், 'கரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மது கடைகளை அவசரமாகத் திறப்பதன் நோக்கம், மேலும் இந்த நோயை அதிகப்படுத்துவதற்காகத் தான். மதுபான கடைகளை மூட வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களும் அறிக்கை விட்டும் கூட, அதை கேட்காமல் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுக்கு நிதி பற்றாக்குறை இருக்கிறது. அதற்கு காரணம் மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி பணம் 2,400 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை.
நமக்கு வரவேண்டியுள்ள இந்தத் தொகை வந்திருந்தால் கூட, மது கடைகளை திறக்காமல் இருந்திருக்கலாம். எனவே, மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்காத காரணத்தால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.