இது குறித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 31.10.2020 அன்று இரவு 11.15 மணிக்கு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அதிமுக ஆட்சியில் எந்த ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் , சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அமைச்சரின் இறப்பு குறித்து பொய்யான அறிக்கைகள் வெளியிட்டு, மலிவான அரசியலை தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்.
மறைந்த வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு , கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12.10.2020 அன்று அனுமதிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தினரின் விருப்பத்திற்கு இணங்கவும், அவருக்கு நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் ஆகியவற்றுக்காக ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையில் அன்னாரது விருப்பத்தின் பேரில் தொடர் சிகிச்சைக்காக 13.10.2020 அன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.
13.10.2020 முதல் அவருக்கு, உரிய உயர் சிகிச்சைகள், காவேரி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் குழுவினால் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.
நானும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரும், காவேரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினருடன் இணைந்து பணியாற்றிட அமைக்கப்பட்ட, சென்னை அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையின் ஒரு சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவும், அமைச்சரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்துவந்தோம்.
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவினரும், தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு சிகிச்சை விவரங்கள் அறிந்து உரிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வந்தனர்.
அமைச்சரின் உடல்நலத்தை, முதலமைச்சரும், அமைச்சர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவக்குழுவினரிடம் விசாரித்தனர்.
உயிர் காக்கும் உயரிய மருந்துகளான ரெமிடிசிவிர், பைபராசிலின் டாசோபாக்டம், டெக்ஸாமெதாசோன், டால்டெபரின், மெரோபெனெம்,
லைன்சோலிட் போன்ற மருந்துகள் அளிக்கப்பட்டதனால், அவரது உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், அவருக்கு தொடர்ந்து அதிக அளவில் பிராணவாயு கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 24.10.2020லிருந்து அவருக்கு நுரையீரல் பாதிப்பு 90 சதவீதமாக அதிகரித்த காரணத்தினால், பல முக்கிய உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின.
காவேரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படியும், ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ வல்லுனர் குழுவின் ஆலோசனைப்படியும், அவரின் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் எக்மோ என்ற உயிர்காக்கும் கருவி மூலம் அவரது நுரையீரல் இயக்கப்பட்டது. 25.10.2020 அன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால், அவருடைய இருதய துடிப்பு சீர் செய்யப்பட்டு தொடர்ந்து விஏஎக்மோ மூலம் அவருடைய இருதயம் இயக்கப்பட்டது. இதனால், 26.10.2020 மற்றும் 27.10.2020 ஆகிய இரண்டு தினங்களில் அமைச்சரது கண் இமைகள் மற்றும் கை கால்களில் அசைவும் இருந்ததை மருத்துவக்குழுவினர் கண்டறிந்தனர்.