திருச்சி:திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மூச்சுத்திணறல் காரணமாக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுத் தலைவராக உள்ளார். அவரது தலைமையில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக்கூட்டம் திருச்சியில் நேற்று(டிச.16) நடந்தது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
19:07 December 17
கணக்குக் குழு ஆய்வு கூட்டத்திற்குப் பின்னர், திருச்சி - சத்திரம் பேருந்து நிலைய கட்டுமானப்பணி, மத்திய சிறை வேளாண் கல்லூரி உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(டிச.17) நடந்த சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கூட்டத்திற்குப் பின்னர், துரைமுருகன் மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் மாலை சென்னை செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், திண்டுக்கல்லில் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவசர அவசரமாக திருச்சிக்கு அழைத்து வரப்பட்டார்.
திருச்சி பட்டாபிராமன் பிள்ளைத் தெருவில் உள்ள மாருதி மருத்துவமனையில் துரைமுருகன் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உடல் பரிசோதனை நடைபெற்றது. துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலறிந்த திமுகவினர், மருத்துவமனை முன்பு திரண்டனர். பரிசோதனையில் அவர் நலமுடன் இருப்பதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரப் பரிசோதனைக்குப் பின்னர் துரைமுருகன் கார் மூலம் சென்னைக்குப் புறப்பட்டார். அவரை திமுகவினர் வழியனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மன அழுத்தம் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டார் - மாமனார் ரவிச்சந்திரன்