திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் தண்டியாத்திரை நினைவார்த்த நாணயம் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத் தலைவர் விஜயகுமார் நூலினை வெளியிட்டு பேசுகையில், “மகாத்மா காந்திஜி 1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார்.
இந்தியாவில் உப்பு உற்பத்திக்கு வெள்ளையர்கள் 1882ஆம் ஆண்டு முதல் வரி விதித்து தங்கள் மொத்த வருவாயில் 8.2 விழுக்காடு அளவிற்கு பெறுகிறார்கள் என்பதை காந்திஜி அறிந்து, இந்திய மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் வெள்ளையருக்கு உப்பு வரி செலுத்த மறுப்பு தெரிவித்தார்.
1930ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து 240 மைல் கல் தொலைவில் உள்ள தண்டி என்ற கடற்கரை கிராமத்திற்கு தனது பாதை யாத்திரையைத் தொடங்கினார்.
24 நாட்கள் நடந்த பாதயாத்திரையின் முடிவில் தண்டியை அடைந்தபின் கடற்கரை ஓரமாக உப்பு தயாரிக்கும் கிராமங்களில் தனது யாத்திரையைத் தொடரவிருந்தார். ஆரம்பத்தில் இப்போராட்டத்தை அலட்சியம் செய்த வெள்ளையர் அரசு இப்போராட்ட செய்திகள் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலம் உலகெங்கும் பரவி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உலக நாடுகளின் ஆதரவு பெருகுவதைக் கண்ட பின் ஏப்ரல் ஆறாம் நாள் காந்தியை கைது செய்து ஓராண்டு சிறை தண்டனை வழங்கினர்.
உப்பானது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அத்தியாவசியத் தேவை என்பதால் இப்போராட்டத்தில் ஒவ்வொரு இந்தியரும் பங்கெடுத்தனர். இது நாடு தழுவிய ஒட்டுமொத்த போராட்டமாக வலுப்பெற்றது.