தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 7, 2020, 10:32 AM IST

ETV Bharat / city

திருச்சியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

திருச்சி: அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சி: அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது
திருச்சி: அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது

கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் இதன் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன் ஒரு கட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாட்டிலிருந்து இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதனடிப்படையில் திருச்சியிலும் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்பட்டனர். அந்த வகையில் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் அரசு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்தனர்.

அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 4ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. அப்போது 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 17 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பிலும், தொடர் சிகிச்சையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்களது வீடு அமைந்துள்ள திருச்சி மாவட்டம் லால்குடி, புறத்தாக்குடி, முசிறி கரட்டாம்பட்டி, உறையூர் பாக்குபேட்டை, தில்லைநகர், ரஹ்மானியாபுரம், உறையூர் பாளையம் பஜார், பீமநகர், அண்ணா நகர், புத்தாநத்தம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், தென்னூர் ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதி, அண்டகொண்டான், சமயபுரம் கூத்தூர், துவாக்குடி மலை ஆகிய பகுதிகள் காவல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்தப் பகுதிகள் அனைத்திலும் தடுப்புகளை ஏற்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டன. வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லவும், அங்கிருந்து யாரும் வெளியே வரவும் காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் நேற்றி கரோனா பாதித்தவர்கள் பட்டியலை அறிவித்தார்.

அதில் மாநிலம் முழுவதும் இன்று (நேற்று) மட்டும் 50 பேர் கரோனா தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் பாதித்தவர்கள் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் 13 பேர் கரோனா தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details