திருச்சி: மணப்பாறை தெற்கு லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் வினோஸ். இவரது மகன் சிரஞ்சீவி(4) விராலிமலை சாலையிலுள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். நேற்று (ஜூன்17) வழக்கம்போல் மாலை 3.50 மணிக்கு பள்ளி முடிந்து வீடு திரும்பும் தனது மகனை அவரது அம்மா கோமளா தேவி அழைத்துக் கொண்டு விராலிமலை ரோட்டில் நடந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அந்தபெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், செயின் பறித்தவர்களை தடுப்பதற்காக தனது ஆட்டோவை அவர்கள் இருசக்கர வாகனம் முன் நிறுத்தியுள்ளார். இதனால், தடுமாறி கீழே விழுந்த அவர்களில் ஒருவர் மட்டும் தப்பித்து சென்ற நிலையில், மற்றொருவரை அப்பகுதியில் உள்ளவர்கள் பிடித்துள்ளனர்.
பட்டபகலில் செயின் அறுப்பு - திருடனை சம்பவ இடத்தில் மடக்கிய டீக்கடை தொழிலாளி,ஆட்டோ ஓட்டுனர் தடுமாறி கீழே விழுந்ததில் நெற்றி மற்றும் இரு கால்களில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றி இருந்தவர்கள் அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை காவல்துறையினர் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை பிடித்து அவரிடமிருந்து 5 பவுன் தாலியை பறிமுதல் செய்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தனர்.
செயின் பறிப்பில் ஈடுபட்டு பொதுமக்களிடம் சிக்கி தரம அடி வாங்கியவர் பலத்த காயமடைந்த அந்த நபரை முதலுதவி சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் செயின் பறிப்பின் போது அந்தப் பெண்ணுக்குக் கழுத்தில் காயம் ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது நாகப்பட்டினம் மாவட்டம், காடம்பாடி சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மீனவர் விஜய் மற்றும் எட்டரை கோப்பு பகுதியைச் சேர்ந்த நவீன் என்பதும் தெரியவந்தது. இதில் விஜய் மட்டும் மாட்டிக்கொண்ட நிலையில், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அக்னிபாத் போராட்டம் - தமிழ்நாட்டில் ரயில்கள் திடீரென ரத்து