தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி நீர் திறப்பு! - பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டது.

முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி நீர் திறப்பு
முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி நீர் திறப்பு

By

Published : Jun 16, 2020, 1:48 AM IST

குறுவை சாகுபடிக்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அன்று திறந்து விடப்பட்ட தண்ணீர் சேலம், கரூர் மாவட்டம் வழியாக நேற்று (ஜூன் 15) திருச்சி மாவட்ட எல்லையை வந்தடைந்தது.

இதைத்தொடர்ந்து காவிரி தண்ணீர் முக்கொம்பு மேலணையை நேற்று (ஜூன் 15), 2 மணிக்கு வந்தடைந்தது. முக்கொம்பு மேலணையில் இருந்து தண்ணீரைக் காவிரி ஆற்றில் பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் பாஸ்கரன் திறந்து விட்டார். அப்போது உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அப்போது விவசாயிகள் காவிரி ஆற்றில் மலர்த் தூவி தண்ணீரை வரவேற்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன செயற்பொறியாளர் பாஸ்கரன் கூறுகையில், 'டெல்டா பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையைத் திறந்து விட்டார்.

அப்போது திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று( ஜூன் 15) நண்பகல் 2 மணிக்கு திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. தற்போது டெல்டா பாசனத்திற்காக முக்கொம்பு மேலணையில் இருந்து கல்லணைக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 16) காலை 11 மணிக்கு கல்லணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடைப் பகுதிவரை தண்ணீர் சென்றடைந்தவுடன் அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, மீதமுள்ள வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்படும்' என்றார்.

தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் தற்போது முக்கொம்பு மேலணை திறக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடைமடை வரை விவசாயிகளுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும். குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். பயிர்க் கடன் வழங்க வேண்டும். ஏற்கெனவே நிலுவை வைத்திருப்பவர்களுக்கும் எவ்வித தடங்கலுமின்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும். கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details