திருச்சி: கரூர் மாவட்டம் கீழவதியத்திலிருந்து மணப்பாறை, துவரங்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் சுமார் மூன்று அடி விட்டம் கொண்ட குழாய் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று(மே18) மணப்பாறை அடுத்த மாகாளிபட்டி பகுதியில் திடீரென குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 50 அடி உயரத்திற்கு குடிநீர் பீச்சியடித்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, குழாயிலிருந்து பீய்ச்சியடித்த குடிநீரில் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும்,அப்பகுதி பொது மக்களும் குளித்து, விளையாடினர். மேலும், அவ்வழியே சென்றவர்கள் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் மேலெழும்பிய காட்சியை கண்டு ரசித்தவாறு சென்றனர். இதனையடுத்து நீர் உந்து நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.