திருச்சி லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடியை சேர்ந்த ஜெய்தேவ் (வயது 22), என்பவரும் அவரது நண்பர் வினோ மேத்திவ் (வயது 22), என்பவரும் நேற்று (ஏப்ரல்.24) நள்ளிரவு தனித்தனி காரில் சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் இருந்து லால்குடி நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் சாலை போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அப்போது நண்பர்கள் இருவருக்கும் இடையே காரில் யார் முன்னே செல்வது என போட்டி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, இரண்டு பேரும் சாலையில் அதிவேகமாகக் காரை இயக்கினர். இரண்டு பேரின் கார்களும் சாலையில் சமமாக வந்தபோது திடீரென இரண்டு கார்களும் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டதால் ஜெய்தேவ் ஓட்டிச் சென்ற கார், சாலையோரத்தில் இருந்த புலியமரத்தில் வேகமாக மோதி முன்பக்கம் முற்றிலும் அப்பளம்போல் நொறுங்கியது.