திருச்சி மலைக்கோட்டை கோயிலில் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளரான சி.டி.ரவி இன்று தரிசனம் செய்தார். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு நல்ல ஆதரவு தருகிறார்கள். தமிழ்நாட்டில் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் தற்போது பாஜக வலிமையாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையான கட்சியாக உள்ளது. எனவே முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும். அவர்களுக்கு பாஜகவின் ஆதரவு இருக்கும். ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அமித் ஷா முன்னிலையில் கூட்டணி குறித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்" என்றார்.
இதற்கு முன்புவரை மத்தியில் இருந்துதான் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது முடிவு எடுக்கப்படும் என்பதுபோல் பேசி வந்தார் சி.டி. ரவி. ரஜினியின் வாயிலாக தமிழ்நாட்டில் வேரூன்றலாம் என எண்ணியிருந்த பாஜகவுக்கு, அரசியலுக்கு வரமாட்டேன் என்ற ரஜினியின் முடிவு அதிர்ச்சியானதாகதான் இருந்திருக்கும்.