திருச்சி:மணப்பாறை அடுத்த பொய்கைபட்டி ஊராட்சி மன்ற தலைவி ரோஸ்லின் சகாயமேரி. இவர் தனது கணவர் ராஜசேகருடன் இணைந்து தனது சொந்த செலவில் வேங்கை, இலுப்பை, நெல்லி, வில்வம், மருது உள்ளிட்ட மூலிகை மற்றும் பழ வகை மரக்கன்றுகளினை, 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் ஊராட்சிக்கு உட்பட்ட புறம்போக்கு இடங்களில் நட்டு பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது ஊராட்சிக்குட்பட்ட கீழ பொய்கைபட்டியில் நடப்பட்ட 1,288 மரக்கன்றுகளுக்கு இன்று இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணியன், வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது பிரசித்தி பெற்ற பிடாரி, காளி ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், மரக்கன்றுகளுக்கு பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து மரம் வளர்ப்போம்!மழை பெறுவோம்! என்ற உறுதிமொழியோடு கேக் வெட்டி கொண்டாடினர்.
மரக்கன்றுகளுக்கு இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மரம் வளர்ப்பதின் முக்கியத்துவம் மற்றும் மூலிகை மரங்களின் தனித்தன்மை குறித்து விளக்கினர். அதனைத் தொடர்ந்து கீழபொய்கைபட்டியலிலிருந்து சரளப்பட்டி செல்லும் சாலையின் பக்கவாட்டு பகுதியில் சுமார் 500 மரக்கன்றுகள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் நடப்பட்டது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவியின் மரக்கன்று வளர்க்கும் ஆர்வத்தை அப்பகுதி பொதுமக்களும்,சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:"குழந்தையின் நலனே முக்கியம்" - 10 மாத குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க ஆந்திர உயர்நீதிமன்றம் மறுப்பு...!