திருச்சி: தஞ்சை, பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்ட திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தீண்டாமை கொடிகட்டிப் பறக்கிறது என்றும் துணைவேந்தர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பகுஜன் சமாஜ்வாடி மாநில ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "யு.ஜி.சி சட்டவிதிகளின்படி பாரதிதாசன் பல்கலைக்கழகம் செயல்படவில்லை. 10 ஆண்டுகளாக கௌரவ பதவிகளை சுழற்சி முறையில் மீண்டும் ஒருசிலரே பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். தற்போதைய பல்கலைக்கழக துணைவேந்தர் முன்னாள் துணைவேந்தரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறார். தன்னிச்சையாக செயல்படவில்லை.
மேலும் எஸ்.சி, எஸ்.டி.க்கான உதவிகளை மாணாக்கர்கள் பெறமுடியாதவாறு அத்துறையின் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். பதவிக்காலம் முடிந்தும் அவரை மீண்டும் பணியமர்த்தும் முயற்சியில் துணைவேந்தர் ஈடுபட்டுள்ளதுடன், எஸ்.சி, எஸ்.டி மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மாநில அரசின் உத்தரவை மீறி கட்டணம் வசூலிப்பதும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இதுகுறித்து விஜிலென்ஸ் குழுவை ஏற்படுத்தி முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும் வகையில் மாநிலம் தழுவிய போராட்டத்தினை முன்னெடுத்து நடத்தும்" என்றார்.
இதையும் படிங்க:போக்குவரத்துத்துறை அமைச்சர் மாற்றம்: காரணம் இதுதானா?