திருச்சி, திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் அருகே சிஐடியு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குச் சங்க செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுனர்கள் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகரனைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகரனிடம் மனு அப்போது சங்க செயலாளர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’திருச்சி மாநகரில் புதிதாக ஆட்டோ ஸ்டாண்ட்கள் அமைக்க வேண்டும் என்று நாங்கள் பல நாட்காளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதற்கு பல்வேறு காரணங்களைக் கூறி மாநகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் அனுமதி மறுத்து வருகிறது. தற்போது மீட்டர் ஆட்டோக்களை இயக்குகிறோம் என்ற போலியான விளம்பரத்தின் மூலம் ஆட்டோ ஸ்டாண்ட்களை தொடங்க பலர் முன் வருகின்றனர்.
இதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கின்றனர். எனவே இத்தகைய போலியான, அங்கீகாரமில்லாத ஆட்டோ ஸ்டாண்ட் திறக்க அனுமதிக்கக் கூடாது. அதேபோல், இருசக்கர வாகனங்களில் பொதுமக்களை அழைத்துச்செல்லும் 'பைக் டாக்ஸி' போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்களுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்
சிஐடியு சங்க ஆட்டோ ஓட்டுனர்கள் மேலும் ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் அவர்கள் இஷ்டத்திற்கு ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்துகொண்டு வசூலிக்கின்றனர். இவற்றை முறைப்படுத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்களின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு முடிவு செய்யப்படும்’ என கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக சிஐடியு ஆர்ப்பாட்டம்