திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் 103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி அப்போலோ மருத்துவமனையின் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் அருண் கீதாயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த துரைசாமி என்ற 103 வயது முதியவருக்கு கடந்த 50 நாட்களுக்கு முன்பு இடுப்பு மூட்டு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் நடக்க முடியாமலும், வலியாலும் அவதிப்பட்டார்.
103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் வெற்றி அவர் நாட்டு வைத்தியம் மூலம் கட்டு கட்டி சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இருந்தும் பலனளிக்கவில்லை. இதையடுத்து 50 நாட்களுக்கு மேலாக அவதியில் இருந்த அவர், திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார். அங்கு உடனடியாக அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.. இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு தற்போது அவர் நடக்கும் அளவுக்கும், தனது சுய வேலைகளை அவரே செய்து கொள்ளும் அளவுக்கும் முன்னேற்றம் அடைந்துள்ளார். இவ்வளவு வயதான ஒருவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு முடித்திருப்பது திருச்சி அப்பல்லோ மருத்துவமனையின் சாதனையாகும்.
அவரது இந்த முன்னேற்றம் மூலம் அவர் மட்டுமின்றி, அவரால் இன்னல்களுக்கு ஆளான அவரது குடும்பத்தினரும் தற்போது மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
வயது முதிர்வு காரணமாக அவரது எலும்பு மீண்டும் கூடுவதற்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறிவியல் பூர்வமாக இல்லாமல் மேற்கொள்ளப்படும் நாட்டு வைத்திய முறையான கட்டு, மாவு கட்டு போன்றவற்றால் நோயாளிகள் மேலும் அவதிக்குள்ளாகி நேரிடும். எலும்பு முறிவு ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால்தான் குணமடைய செய்ய முடியும். அதை தாண்டினால் ஆபத்தான கட்டமாக மாறிவிடும். 300 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட இந்த நாட்டு வைத்திய முறையால் நோயாளிகள் நீண்ட நாட்களுக்கு படுத்த படுக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, சளி தொந்தரவு உண்டாகும். சிறுநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகள் ஏற்பட்டு, உடல் வெகுவாக பாதிக்கப்படும். இதற்கு முன்பு திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் 101 வயதுடையவருக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக தற்போது 103 வயதுள்ள ஒருவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது என்றார்.
இதையும் படிக்க:பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டியின் வீடு நாசம்!