திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள பொய்கை மலை வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் உணவுக்காகச் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று (பிப். 15) வனப்பகுதி அருகேயுள்ள கீழப் பொய்கைப்பட்டியில் தனிநபருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் மயில்கள் கொத்துக் கொத்தாக இறந்துகிடப்பதாக அப்பகுதி வன ஆர்வலர்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மணப்பாறை வனச்சரகர் மகேஷ்வரன் தலைமையிலான வனத் துறையினர் அழுகிய நிலையில் கிடந்த 6 ஆண் மயில்கள், 16 பெண் மயில்கள் என 22 மயில்களைக் கைப்பற்றினர்.
மேலும் இது குறித்து தோட்டத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த மாதம் வேங்கைக்குறிச்சி, பெருமாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மயில்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்ததையடுத்து தற்போது மீண்டும் மயில்கள் இறந்துள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தது பாஸ்டேக் முறை