தஞ்சாவூர் அருகே பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த 17 வயது சிறுமி, சில நாள்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்துவந்துள்ளார். ஆனால், இதுகுறித்து தனது பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஏப். 21) சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி வந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர், அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச்சென்றுள்ளனர்.
தாயான சிறுமி: அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் ஆகாத நிலையில், சிறுமிக்கு குழந்தை பிறந்தது மருத்துவர்களுக்கு தெரியவரவே, இது குறித்து தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், மருத்துவமனைக்குச் சென்ற காவல் துறையினர், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தந்தையான சிறுவன்:விசாரணையில், பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்து வரும் பக்கத்து வீட்டைச்சேர்ந்த 12 வயது சிறுவன், சிறுமியிடம் நெருக்கமாக பழகியதாகவும், இதில் சிறுமி கர்ப்பமானதாகவும் காவல் துறையினருக்குத் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், சிறுமியின் பெற்றோரிடமும் இதுகுறித்து விசாரித்தனர். அதில், இதுபற்றி தங்களிடம் எதுவும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர்.