திருப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 30) திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த மேடையில் மொத்தம் 13 வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு, பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொள்வார் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள்,
- அவிநாசி - அதிமுக - தனபால்
- திருப்பூர் வடக்கு - அதிமுக - விஜயகுமார்
- திருப்பூர் தெற்கு - அதிமுக - குணசேகரன்
- பல்லடம் - அதிமுக - எம்.எஸ்.எம் ஆனந்தன்
- உடுமலைப்பேட்டை - அதிமுக - உடுமலை ராதாகிருஷ்ணன்
- மடத்துக்குளம் - அதிமுக - மகேந்திரன்
- காங்கேயம் - அதிமுக - ஏ.எஸ்.ராமலிங்கம்
- தாராபுரம் - பா.ஜ.க - எல்.முருகன்
- கோவை தெற்கு - பா.ஜ.க - வானதி சீனிவாசன்
- கோவை தொண்டாமுத்தூர் - அதிமுக - எஸ்.பி வேலுமணி
- கோவை - பொள்ளாச்சி (அதிமுக) - பொள்ளாச்சி ஜெயராமன்
- ஈரோடு - மொடக்குறிச்சி - சி.கே.சரஸ்வதி
- கரூர் - அரவக்குறிச்சி - அண்ணாமலை
இந்த 13 சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்களும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
பிரதமரின் பயண திட்டம்:
டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை 10.15 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 10.50 மணிக்கு பாலக்காடு செல்லும் அவர், அங்கு பரப்புரையை முடித்துக்கொண்டு 12 மணிக்கு கிளம்பி ஹெலிகாப்டர் மூலம் 12.45 மணிக்கு தாராபுரம் வருகிறார். 12.50 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கும் மேடைக்கு வரும் பிரதமர் , 12.50 முதல் 1.35 வரை தாராபுரம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொள்கிறார்.
பிறகு தாராபுரத்தில் இருந்து கிளம்பி கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை, பிறகு சென்னையில் இருந்து கிளம்பி புதுச்சேரி சென்று பரப்புரையை முடித்துக்கொண்டு, மீண்டும் சென்னை வந்து டெல்லி திரும்புகிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள்:
இந்தப் பொதுக்கூட்டத்திற்காக தாராபுரம் - உடுமலைப்பேட்டை சாலையில், அமராவதி திடல் பகுதியில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 80 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார் செய்யப்பட்டு , முழுவதும் பந்தல் போன்ற அமைப்பில் பொதுக்கூட்ட மேடை மற்றும் பொதுமக்கள் அமரும் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.