திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தனர்.
ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று (டிச. 28) மதுபான கடைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போடப்பட்டிருந்த பந்தல், நாற்காலி ஆகியவை அகற்றப்பட்டதால் போராட்டக் குழுவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.