எங்கு திரும்பினாலும் பின்னலாடை நிறுவனங்கள், அதனை சார்ந்த ஜாப் வொர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வரும் ஊர் திருப்பூர். 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்து வருகின்றனர். ஆடைத் தயாரிப்பு, வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி என எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் திருப்பூர், கரோனா பொதுமுடக்கத்தின் போது கடும் பாதிப்பை சந்தித்தது. ஆனால், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் நிலைமை இன்னும் சீராகவில்லை என்றும், அதற்கு அரசுதான் காரணம் என்றும் புகார் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.
கரோனா காலத்தில் வருமானமின்றி மிகவும் சிரமப்பட்டு வந்த தொழிலாளர்களை தமிழக அரசு திரும்பிக்கூட பார்க்கவில்லை என்றும், தொழிலாளர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்கியதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், தேர்தல் நெருங்குவதால் சில சலுகைகளையும், பொங்கல் பரிசாக 2,500 ரூபாயும் கொடுப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.