திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள், கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நவம்பர் 6ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்துக்கு வருகை தர இருக்கிறார். இந்நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று (நவம்பர் 4) நடைபெற்றது.
'தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள முதலமைச்சர் திட்டம்' - உடுமலை ராதாகிருஷ்ணன்
திருப்பூர்: அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள், தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள நவம்பர் 6ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திருப்பூர் வரயிருப்பதாக, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராதாகிருஷ்ணன், "திருப்பூர் மாவட்டத்துக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். அதன் பிறகு ஆட்சியர் அலுவலகத்தில், திருப்பூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த வளர்ச்சித் திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைக்க இருக்கிறார். அதைத் தொடர்ந்து நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள், தொழில்துறை பிரதிநிதிகளோடு ஆலோசனை நடத்துவார்" என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.