திருப்பூர்: ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு காவல் துறை கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் தொடர்பான காணொலி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முகக் கவசம் அணிவது எவ்வளவு முக்கியம் என்பதற்கு சான்றாக திருப்பூர் மாவட்டக் காவல் துறை சார்பில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கும் 6 வகை பழங்கள் அடங்கிய தொகுப்பு விற்பனைத் தொடக்கம்!
காவல் துறையினர் வெளியிட்டுள்ள அந்தக் காணொலியில், திருப்பூர் மாவட்ட காவல் துறையினர், பல்லடம் நான்கு ரோடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருக்கும்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை நிறுத்தி, அவர்கள் முகக் கவசம் அணியாமல் வந்தது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர்.
பிறகு, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அவசர ஊர்தியில் அவர்களை ஏற்றி விட காவல் துறையினர் முயற்சி செய்கின்றனர். அந்த அவசர ஊர்தியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது போல, முகக் கவசம், பாதுகாப்பு உடை போன்றவற்றை அணிந்தபடி ஒரு நபர் படுத்திருக்கிறார்.
திருப்பூர் மாவட்டக் காவல் துறை வெளியிட்ட காணொலி இவர்களை காவல் துறையினர் அவசர ஊர்திக்குள் தள்ளியதும், படுத்திருந்த நபர், “உங்களுக்கும் கரோனாவா, எனக்கும் கரோனா” என்கிறார். உடனே அந்த நபருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதாக எண்ணி, முகக் கவசம் அணியாமல் வந்த 3 இளைஞர்கள் அந்த ஊர்தியில் இருந்து வெளியேற எப்படியெல்லாம் முயற்சி செய்கின்றனர் என்பன போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இக்காட்சிகளை சினிமா காமெடி வசனங்கள், மியூஸிக் ஆகியவற்றை இணைத்து கலக்கலான காணொலியாக காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த விழிப்புணர்வு காணொலியின் இறுதியில் பேசும் காவல் துறை அலுவலர் ஒருவர், அவசர ஊர்தியில் இருந்த நபர் விழிப்புணர்வு ஏற்படுத்த வந்ததாகவும், அவருக்கு உண்மையில் கரோனா தொற்று இல்லை என்றும் விளக்கமளிக்கிறார். மேலும் அத்தியாவசிய, அவசர தேவைகளுக்கு வெளியில் வரும் மக்கள் முகக் கவசம் அணிவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.
ட்ரோன் கேமராவை கண்டு ஓடிய இளைஞர்கள் - வெளியான வீடியோ
சில நாள்களுக்கு முன்பு ஊரடங்கு நேரத்தின்போது வெளியில் சுற்றுவது தவறு என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காணொலி பதிவை திருப்பூர் மாவட்டக் காவல் துறையினர் வெளியிட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த காணொலி பதிவும் காவல் துறையினர் சார்பில் வெளியிடப்பட்டு சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.